ரோஹித் காயம்.., அமெரிக்க மைதானம் மீது பிசிசிஐ புகார்.!

Indian Cricket Team Captain Rohit Sharma

நியூ யார்க்: கிரிக்கெட் மைதானத்தின் தன்மை குறித்து பிசிசிஐ, ஐசிசியிடம் அதிகாரபூர்வமற்ற புகார் அளித்துள்ளது.

தற்போது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவில் பெரும்பாலும் கிரிக்கெட் மைதானங்கள் கிடையாது. அங்கு தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துரிதமாக அமைக்கப்பட்டவை. அதனால் அந்த மைதானங்கள் மீதான கேள்விகள் தினமும் எழுந்தவண்னம் இருக்கிறது.

பெரும்பாலும் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்டிங் ஆடுபவர்களுக்கு கடும் சவாலானதாகவும் உள்ளது. குறிப்பாக, இந்தியா விளையாடிய நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களை ஒரு அணி கடந்துள்ளது.

போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, ஐசிசி அதிகாரப்பூர்வமாக அமெரிக்க மைதானத்தின் தன்மை குறித்தும் , ஆடுகளத்தை கணிக்க முடியாத நிலை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருந்தது. பிட்ச்கள் இன்னும் சரியாக மைதானத்தில் செட்டில் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது.

இதே மைதானத்தில் கடந்த 6ஆம் தேதி இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கையில், அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் வீசிய பந்து ரோஹித்தின் கையை பதம் பார்த்தது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து இடையில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நாளை இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போதும், பந்துவீச்சானது பேட்டிங் பிடிப்பவர்களுக்கு சிறிது அச்சத்தை ஏற்படும் வகையில் இருக்கிறது என்ற கூற்றும் நிலவுகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட தொடக்க ஆட்டத்தின் போது ஆட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்படியாக பேட்டிங்கிற்கும், பேட்டிங் பிடிக்கும் வீரர்களின் பாதுகாப்புக்கும் குறைபாடு ஏற்படும் வகையில் உள்ள மைதானத்தின் தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) , சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம்  (ஐசிசி) அதிகாரபூர்வமற்ற புகார் ஒன்றை  அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்களின் நலன் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்