#TNPL2021: ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது டிஎன்பிஎல் தொடர்.. போட்டி அட்டவணை, ஏலம் தேதி, உள்ளிட்ட விபரம்!
ஐந்தாவது சீசனுக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் டிஎன்பிஎல் பெரிய தொடராக கொண்டாடப்படுகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், ஐபிஎல் தொடருக்கும், இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள். இதனால் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த தொடர், மிக பெரிய வாய்ப்பாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தமிழக வீரர்கள், தொடர் முடிந்தவுடன் இந்த தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஐந்தாவது சீசனுக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள், டிஎன்பிஎல் தொடருக்கும் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய நான்கு நகரங்களில் உள்ள மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் கோவை, சேலத்திலும், இறுதிப்போட்டி சேலம் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ், செபாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்கள் மற்றும் ஐ-ட்ரீம் திருப்பூர் தமிழன்கள் என மொத்தமாக 8 அணிகள் உள்ளது. இதில் தூடி பேட்ரியாட்ஸ் அணிக்கு பதிலாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி இடம்பெற்றுள்ளது.
இந்த டிஎன்பிஎல் தொடருக்கான ஏலம், மே 7-ம் தேதி நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் போலவே இந்த ஏலம் நடைபெறவுள்ளதாகவும், இதிலும் வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து நெல்லை அணியில் மூன்று பேரும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தலா இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.