அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி 245 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி மிரட்டலாக விளையாடியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற உடனடியாகவே நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக தேர்வு செய்தது மட்டுமின்றி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் பவர்பிளெயிலே பட்டையை கிளப்பினார்கள்.
3 ஓவர்கள் முடிவதற்கு முன்னதாகவே இவர்கள் இருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணிக்கு 60 ரன்களுக்கு மேல் கிடைத்துவிட்டது. அந்த அதிரடியின் போது தான் பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக களத்திற்கு வந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவர் விட்டு சென்ற அதே அதிரடி பாணியில் ஆடிக்கொண்டு இருந்தார். மற்றொரு முனையில் நின்று கொண்டிருந்த பிரப்சிம்ரன் சிங் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் மட்டும் விக்கெட்கள் விழுந்தாலும் நிற்கவில்லை என்று சொல்லலாம். 5 சிக்ஸர் 2 பவுண்டரி என விளாசி தனது அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். இருப்பினும், பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்த பிறகு வந்த நேஹால் வதேரா 27, ஷஷாங்க் சிங் 2 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நின்று பவுண்டரி சிக்ஸர் என விளாசி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் ஹர்சல் படேல் 17-வது ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் 3, ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களில் ஆகியோரை ஆட்டமிழக்க செய்தார்.
அவருக்கு அடுத்ததாக வந்த ஸ்டாயினஸ் கடைசி ஓவரில் ஷமி பந்தை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டார் என்று சொல்லலாம். 3,4,5, 6ஆகிய 4 பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்கு விளாசினார். கடைசியில் மிரட்டலான ஆட்டத்தை ஸ்டாயினஸ் ( 34*) ஆட இறுதியதாக பஞ்சாப் அணி மிரட்டலான ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்ததாக அதிரடியான பேட்டிங் லைன் அப் வைத்திருக்கும் ஹைதராபாத் களமிறங்கவுள்ளது. மேலும். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.