‘பேட்டிங் மட்டும் போதாது தம்பி”…அபிஷேக் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங் கொடுத்த அட்வைஸ்!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் அதிரடி இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு அதிரடியாக இருந்ததோ அதே போல தான் இப்போதும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங் ருத்ரதாண்டவமாக இருந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து 13 சிக்ஸர்கள் விளாசி மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினார். அது மட்டுமின்றி, 37 பந்துகளில் (100) சதம் விளாசி சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். எனவே, அவருடைய பேட்டிங் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள்.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மட்டும் பாராட்டு தெரிவித்ததோடு சில அட்வைஸ்களையும் வழங்கியுள்ளார். அபிஷேக் சர்மாவின் பேட்டிங் மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக பந்து வீச வேண்டும். அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர். அவரது ஆரம்ப காலத்திலேயே நான் அவரைப் பார்த்தபோது, அவரது சீம் பொசிஷன் மிகவும் சிறப்பாக இருந்தது.
பேட்டிங்க்காக அவர் எந்த அளவுக்கு பயிற்சி எடுக்கிறாரோ அதைப்போலவே பந்துவீசுவதற்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவர் பேட்டிங்கில் செலுத்தும் அதே முயற்சியை பந்துவீச்சில் செலுத்துவதில்லை. அவர் என்னை எப்போது சந்திக்க வந்தாலும் நான் அவரிடம் சொல்லும் விஷயம் பந்துவீச்சிக்கு இன்னும் அதிகமான பயிற்சியை மேற்கொள் என்று தான். பந்துவீச்சை விட அவர் பேட்டிங்கை அதிகமாக விரும்புவதால் காரணமாக அவர் அதிகமாக அதில் ஆர்வம் காட்டவில்லை என நான் நினைக்கிறேன்.
மற்றபடி, பேட்டிங்கில் அவரை பற்றி குறை சொல்வதற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை. தொடக்கத்தில் இருந்தே அவர் பயப்படாமல் விளையாடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் காலத்தில் இப்போது இருக்கும் அதிரடியை விட இன்னும் பலமடங்கு அதிரடியாக விளையாடுவார் என நான் நினைக்கிறேன்” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.