நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேச அணி!
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி,இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டெஸ்ட்டின்,முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 328 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச அணி 458 ரன்கள் எடுத்து 130 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.அதிகபட்சமாக வில் யங் 69 ரன்களும்,ராஸ் டெய்லர் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து,40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 42 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2001 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தில் விளையாடி வரும் வங்கதேச அணி இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது.