“இது தான் விதி”…திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!
உலக அளவில் சாதனைகள் குறைவு தான் ஆனால், வங்கதேச அணிக்காக நான் 100 % மேல் என்னுடைய அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறேன் என முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் : அணியின் மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2006 இல் ஜிமாபாப்வேக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர் வங்கதேச அணிக்கு முக்கிய தூணாக இருந்துள்ளார். 274 போட்டிகளில் விளையாடி, வங்கதேச அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் 36.42 சராசரியுடன் 7,795 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒன்பது சதங்களும் அடங்கும். ஒரு விக்கெட் கீப்பராக, அவர் 243 கேட்சுகளை எடுத்துள்ளார். அதே சமயம். 56 ஸ்டெம்பிங்கும் செய்திருக்கிறார். வங்கதேச அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது ஓய்வை அறிவித்தார். ஓய்வு அறிவித்தது குறித்து அவர் பேசுகையில் ” இந்த நேரத்தில் நான் வேதனையுடன் என்னுடைய ஓய்வை அறிவிக்கிறேன். உலக அளவில் நமது சாதனைகள் குறைவாகவே இருந்திருக்கலாம், ஆனால் ஒன்று நிச்சயம். நான் என் நாட்டிற்காக களத்தில் இறங்கும் போதெல்லாம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் 100% க்கும் அதிகமாகக் என்னுடைய விளையாட்டை கொடுத்துள்ளேன்.
கடந்த சில வாரங்களாகவே நான் ஓய்வு பெறவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்து கொண்டே இருந்தது. இறுதியாக இது தான் விதி என நான் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். அந்த முடிவை எடுத்துவிட்டு இப்போது உங்களிடம் அறிவித்திருக்கிறேன். கடைசியாக, கடந்த 19 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடிய எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.