10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி.!
ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஃபின்ச் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்தார்.
இதைதொடர்ந்து, இறங்கிய விராட் கோலி சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 51 ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.
164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே 6 ரன்னில் டேவிட் வார்னர் வெளியேறினார். பின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி இணைந்து அணியை சரிவில் இருந்து மீண்டு கொண்டு வந்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே 34 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து, அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 61 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஹைதராபாத் அணி 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோல்வியை தழுவியது.
பெங்களூர் அணியில் சாஹல் 3 , சிவம் துபே மற்றும் நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.