KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா ஆரம்பத்தில் அதிரடியாகவும் அடுத்ததாக திணறியும் விளையாடி வந்தது. முதல் 10 ஓவரில் 100 ரன்களும் அடுத்த 10 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்தனர்.
கடைசி நேரத்தில் தடுமாறி தடுமாறி விளையாடி வந்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனையடுத்து பெங்களூர் அணி 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட் அரைசதம் விளாசினார். அதிரடியாக விளையாடி அவர் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி அவரைப்போலவே அதிரடியுடன் விளையாடினார்.
சிக்ஸர் பவுண்டரி என தெறிக்கவிட்ட அவர் 30 பந்துகளில் அரைசதம் விளாசினார். அது மட்டுமின்றி கடைசி வரை களத்தில் நின்று அணியையும் வெற்றிபெற வைத்தார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூர் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. விராட் கோலி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அவருடன் லியாம் லிவிங்ஸ்டன்15 ரன்களுடன் களத்தில் நின்றார். பந்துவீச்சை பொறுத்தவரையில் வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
புதிய சாதனை
சேஸிங் மாஸ்டர் என அன்போடு அழைக்கப்படும் விராட் கோலி இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அசத்தலாக விளையாடி அரைசதம் விளாசியதுடன் சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். அது என்ன சாதனை என்றால் 4 அணிக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். ஏற்கனவே, சென்னை, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக இந்த சாதனையை படைக்க அவருக்கு 38 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனை அரை சதம் விளாசி படைத்ததுடன் அணியையும் வெற்றிபெற வைத்தார்.