BAN vs SA : வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா! 10 ஆண்டுகளில் நிகழ்ந்த உலக சாதனை!!
வங்கதேசம், தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாக்கா : தென்னாபிரிக்கா அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த அக்-21ம் தேதி டாக்காவில் தொடங்கியது.
தென்னாபிரிக்கா அணியின் சாதனை :
இந்த போட்டியில் 4-வது நாளான இன்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. அது என்ன சாதனை என்றால், ஆசிய மண்ணில் தென்னாபிரிக்கா அணி 10 வருடங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது.
இதற்கு முன், கடந்த 2014ம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக இலங்கை மண்ணில் தென்னாப்பிரிக்கா பெற்ற டெஸ்ட் வெற்றியே அந்த அணியின் கடைசி ஆசிய டெஸ்ட் வெற்றி ஆகும். அதன் பின் ஆசிய கண்டத்தில் தென்னாப்பிரிக்கா எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அதே போல, வங்கதேச மண்ணில் கடைசியாக 2008-ம் ஆண்டு தான் தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
இதனால், 10 ஆண்டுகளுக்கு பின் ஆசிய மண்ணிலும், 16 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேச மண்ணிலும் முதல் வெற்றியைப் பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி. இந்த வெற்றியின் மூலம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 47.61 வெற்றி சதவீதத்துடன் 4-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம் :
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸ்க்கு வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத் தொடர்ந்து, தென்னாபிரிக்கா அணி பேட்டிங் களமிறங்கி விளையாடி அவர்களது முதல் இன்னிங்ஸ்க்கு 308 ரன்கள் சேர்த்தனர். இதனால், அப்போதே 202 ரன்கள் தென்னாபிரிக்கா அணி முன்னிலை பெற்றது.
அதன் பின், அதிக ரன்கள் எடுக்க வேண்டும் முனைப்புடன் களமிறங்கிய வங்கதேச அணி 10 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக தென்னாபிரிக்கா அணிக்கு 106 என்ற எளிய இலக்கு நிர்ணையிக்கப்பட்டது.
இதனால், எளிதில் அந்த இலக்கை எட்டி தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் வெற்றிப் பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரான வெர்ரின்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டியானது வரும் அக்.-29ம் தேதி (செவ்வாய்கிழமை) சட்டோகிராமில் தொடங்கவுள்ளது.