இந்தூர் மைதானம் பிட்ச்சிற்கு, ஐசிசி கொடுத்த மோசமான ரேட்டிங்.!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூர் மைதானத்திற்கு ஐசிசி மோசமான ரேட்டிங் கொடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் அணியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி 2நாட்கள் மற்றும் ஒரு செஷனில் நிறைவடைந்தது. மேலும் இந்தூர் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு ஏற்றாற்போல் அதிகமாகவே ஒத்துழைத்தது. முதல் நாளிலேயே 14 விக்கெட்கள் விழுந்தன. ஒட்டுமொத்தமாக 31 விக்கெட்களில் 26 விக்கெட்கள் ஸ்பின்னர்களுக்கு மட்டும் கிடைத்தது. 4 விக்கெட்கள் வேகப்பந்து வீச்சுக்கும் 1 விக்கெட் ரன் அவுட்டிலும் விழுந்தது.
இதனையடுத்து ஆட்டத்தின் நடுவர் கிறிஸ் பிராட் இரு அணிகளின் கேப்டன்களிடம் கலந்தாலோசித்து தனது அறிக்கையை ஐசிசி விடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து ஐசிசி இந்த மைதானத்திற்கு 3 டிமெரிட் புள்ளிகளை வழங்கியுள்ளது. இது குறித்து பிராட் கூறும்போது பிட்ச் மிகவும் காய்ந்து இருக்கிறது, பேட் மற்றும் பந்துக்கும் இடையே சரிசமமாக செல்லாமல் ஸ்பின்னர்களுக்கு முதல் நாளிலிருந்து அதிகமாக திரும்பியது என்று கூறினார்.
பிசிசிஐ தனது மேல்முறையீடு செய்வதற்கு இன்னும் 14 நாட்கள் இருக்கிறது, ஐசிசியின் பிட்ச் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு செயல்முறையின்படி, ஒரு மைதானம் ஐந்தாண்டு காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால் 12 மாதங்களுக்கு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் நடத்த முடியாது.