#AUSvIND: தொடங்கியது இறுதிப்போட்டி! வெல்லும் அணி படைக்கபோகும் புதிய வரலாறு.!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கிய நிலையில், இதில் வெல்லும் அணி புதிய வரலாற்றை படைக்கவுள்ளது.
ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முதல்முறையாக டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இன்று தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால், குறிப்பிட்ட 5 நாட்களில் விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அதனை ஈடு செய்ய ஜூன் 12ம் தேதி ரிசர்வ் டே ஆக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று முதல் 5 நாட்கள் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ஒரு புதிய வரலாற்றை படைக்க உள்ளது. அதாவது, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணி, ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற முதல் அணி என்ற புதிய வரலாற்றை படைக்கும்.
இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் ஐசிசியின் சாம்பியன் டிராபி, ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில்லை, கடந்த முறை இந்திய அணி இறுதிப்போட்டி வரை வந்து நியூசிலாந்து அணியிடம் தோற்றது.
எனவே, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற முனைப்பில் உள்ள நிலையில், புதிய வரலாற்றை படைக்க போவது இந்தியாவா, ஆஸ்திரேலியாவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா எத்தனை ஐசிசி போட்டிகளில் வென்றுள்ளன என்பது குறித்து பார்க்கலாம். ஆடவர் ஐசிசி போட்டிகளில் இந்தியா 5 முறையும், ஆஸ்திரேலியா 8 முறையும் பட்டங்களை வென்றுள்ளது.
அதன்படி, இந்தியா 2 முறை ஒருநாள் உலகக் கோப்பையையும் (1983, 2011), டி20 உலகக் கோப்பையை ஒரு முறையும் (2007), சாம்பியன்ஸ் டிராபியை 2 முறையும் (2002, 2013) வென்றுள்ளது. இதுபோன்று, ஆஸ்திரேலியா ஐந்து முறை ODI WC வென்றது (1987, 1999, 2003, 2007, 2015), T20 WC ஒரு முறை (2021) மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை 2 முறையும் (2006, 2009) வென்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.