திக்திக் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி…! வெளியேறிய தென்னாப்பிரிக்கா…!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்து அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினார். இதில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
அதன்படி குயின்டன் டி காக் 3 ரன்னிலும், டெம்பா பவுமா ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் நிலைத்து நிற்காமல் ராஸ்ஸி வான் டெர் டுசென் 6 , ஐடன் மார்க்ராம் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 24 ரன்களுக்குள் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன்பிறகு, ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் விளையாடினார்கள்.
இருவரும் தலா 10 ரன்கள் எடுத்திருந்த போது மழைக் குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் போட்டி தொடங்கியதும் களத்தில் இருந்த இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். அதிலும் ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தைத் தவறவிட்டு, 47 ரன்களில் போல்ட் ஆனார். இருப்பினும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் விளாசி 101 ரன்களில் கம்மின்ஸ் வீசிய பந்தில், டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் , டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதில் வார்னர் 18 பந்தில் 4 சிக்ஸர் , 1 பவுண்டரி என 29 ரன்கள் எடுத்து மார்க்ரம் ஓவரில் போல்ட் ஆனார். இவர்களின் கூட்டணியில் 60 ரன்கள் சேர்க்கப்பட்டது. அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார். மறுபுறம் விளையாடிய தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து 62 ரன்கள் எடுத்து மகாராஜ் ஓவரில் போல்ட் ஆனார்.
இதை எடுத்து மார்னஸ், ஸ்மித் இருவரும் களமிறங்கினர், இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் மார்னஸ் 18 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் ஒரு ரன் எடுத்து போல்டாகினார். இதனால் ஆஸ்திரேலியா சற்று தடுமாறியது. பின்னர் விக்கெட்டை இழக்காமல் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக நிதானமாக விளையாடி வந்தனர். மத்தியில் இறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுக்க இறுதியாக ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவரில் 7 விக்கெட்டைகளை இழந்து 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா அணியில் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி தலா 2 விக்கெட்டையும், ரபாடா, ஐடன் மார்க்ராம், கேசவ் மகாராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளது.