தொடர் வெற்றியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி! கேள்விக் குறியான பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் 14-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் விளையாடியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது.
கடந்தப் போட்டியை போலவே பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலும் தொடக்க வீராங்கனைகள் ரன்கள் எடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியால் ஒரு பவுண்டரிகள் கூட அடிக்க முடியாமல் திணறினார்கள்.
இருப்பினும் பாகிஸ்தான் அணியின் அலியா ரியாஸ் மட்டும் நின்று அவரது பங்கிற்கு 26 ரன்கள் அடித்திருப்பார். இதனால், 19. 5 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 82 ரன்கள் மட்டுமே குவித்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபேல் சுதர்லாண்ட் 2 விக்கெட்டும், ஜார்ஜியா வேர்ஹாம் 2 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.அதன் பின் வெறும் 83 என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது.
தொடக்க முதலே அதிரடியான விளையாட்டை விளையாடிய ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 11 ஓவர்களிலேயே அந்த போட்டியை முடித்தது. அதிலும் பெத் மூனி 15 ரன்களும், அலைசா ஹீலி 37 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 22 ரன்களும் எடுத்திருந்தனர்.
பாகிஸ்தான் மகளிர் அணியில் சதியா இக்பால் ஆஸ்திரேலியா அணியின் அந்த ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. இதனால் பாகிஸ்தானின் அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக் குறி ஆகி இருக்கிறது.