சிறந்த பீல்டிங் அணி பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நெதர்லாந்து..!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்முலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் மோசமாக செயல்பட்டனர்.

பீல்டிங்கில் இந்திய அணியால் சிறப்பாக செயல்படாததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிகளின் பட்டியலை  ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணியாக ஆஸ்திரேலியாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.

சிறந்த பீல்டிங் அணி பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியா ஃபீல்டிங் இம்பாக்ட் ரேட்டிங்கில் 383.58 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 கேட்ச்களை பிடித்துள்ளது. மூன்று கேட்ச்களை மட்டும் கைவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி 340.59 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி 292.02 புள்ளிகளுடன்  மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 281.04 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

நெதர்லாந்தை விட பின்தங்கிய இந்திய அணி:

2023 உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிக்கான தரவரிசை பட்டியலில்  நெதர்லாந்தை விட இந்திய அணி பின்தங்கியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை பட்டத்தை வென்றது மட்டுமல்லாமல் சிறந்த பீல்டிங் அணிக்கான பட்டத்தையும் வென்றது. பீல்டிங்கில் ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் 100 புள்ளிகள்  உள்ளது.

சிறந்த பீல்டிங் வீரர்கள் பட்டியல்:

ஐசிசி சிறந்த பீல்டிங் வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் டேவிட் வார்னர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். இந்திய அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி பெயர் இடம்பெற்றுள்ளது.

மார்னஸ் லாபுஷாக்னே 82.66 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,வார்னர் 82.55 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 79.48 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 72.72 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

நெதர்லாந்தின் சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட்  ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.  உலகக்கோப்பை போட்டியில் 765 ரன்கள் குவித்து சாதனை படைத்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 56.79 புள்ளிகளுடன் ஆறாவது  இடத்திலும் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்