டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் தான் இந்திய அணி முதலில் வெற்றி பெற்றிருந்தது.
அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறவில்லை. 2 போட்டியில் ஆஸ்ரேலியா வெற்றிபெற்ற நிலையில், ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து, 5-வது போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்த்தனர். சிட்னி மைதானத்தில் கடந்த ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கிய 5-வது போட்டியில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்கத்தில் இருந்தே சற்று தடுமாறி விளையாடி வந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்ரேலியா 51 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அடுத்ததாக தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸை போலவே விக்கெட்டை இழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து மூன்றாவது நாளான இன்று ஆல் -அவுட் ஆனது. இதனையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்ரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற முடியாத சூழலில் உருவானது தான் பெரிய வருத்தமாகவும் உள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இந்த முறை பார்டர் – கவாஸ்கர் தொடரின் தோல்வியால் அது கனவாகிவிட்டது.