பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை ..!

பாகிஸ்தான் அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை 1-0 என கைப்பற்றியது.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தன. இதைத்தொடர்ந்து, லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா வெற்றி:
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் 268 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 227 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதனால், ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு 351 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர், 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 235 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆஸ்திரேலியா 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம்:
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்தில் இந்த ஆண்டு வந்தது. 1998-ல் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 என கைப்பற்றியது. தற்போது மீண்டும் 2022-ல் பாகிஸ்தானில் நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. இதனால், பாகிஸ்தானில் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக 1960-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது. அப்போது ஆஸ்திரேலிய அணிக்கு ரிச்சி பெனாட் தலைமை தாங்கினார். இதன்பிறகு, 1998-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மார்க் டெய்லர் இருந்தார்.