இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல்.. 3-வது அணியாக அரையிறுதிக்கு சென்ற ஆஸ்திரேலியா..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் அணியின் தொடக்க  வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.

இதில், தொடக்க வீரர் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்கினார். இதைத்தொடர்ந்து, இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா 30 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.   ஒருபக்கம் ஹஷ்மத்துல்லா ஷாஹித் 26, அஸ்மத்துல்லாஹ் 22 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இருப்பினும், மறுபக்கம் தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

கடைசியில் இறங்கிய ரஷித் கான் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் , மேக்ஸ்வெல் மிட்செல் ஸ்டார்க், ஜம்பா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

292 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரின் 2-வது பந்திலேயே டக் அவுட்டாகி ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட் வெளியேறினார். அடுத்து மிட்செல் மார்ஷ் களமிறக்க வந்த வேகத்தில் தலா 2 சிக்ஸர் , பவுண்டரி விளாசி எல்பிடபிள்யூ மூலம் 24 ரன்னில் அவுட் ஆனார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6-வது ஓவரிலேயே 2-வது விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது.

முதல் 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் வீழ்த்தினார். பின்னர் மார்னஸ் லாபுசாக்னே களமிறக்க மறுபுறம் களத்தில் இருந்த தொடக்க வீரர் டேவிட் வார்னர்18 ரன்னில் போல்ட் ஆனார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 6, மிட்செல் ஸ்டார்க் 3 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் மத்தியில் இறங்கிய கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் நிதானமாகவும், பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தனர்.

291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா சென்று கொண்டு இருக்கும்போது அடுத்தடுத்து 7 விக்கெட்களை இழந்த நிலையில் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். இதில் மறுபுறம் பாட் கம்மின்ஸ் மேக்ஸ்வெல்லுக்கு துணையாக விளையாடி வந்தார். போட்டியின் 38-வது ஓவரின் போது மேக்ஸ்வெல்லுக்கு முதுகு வலி ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் மேக்ஸ்வெல் மிகவும் சிரமத்துடன் அணிக்காக விளையாடி வந்தார். இருப்பினும் இதைத்தொடர்ந்து விளையாடி மேக்ஸ்வெல் சிக்ஸர், பவுண்டரி என விளாசி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு வந்தார்.

இறுதியாக ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவரில் 7 விக்கெட் இழந்து  293 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 128 பந்திற்கு 21 பவுண்டரி ,10 சிக்ஸர்கள் என மொத்தம் 201* ரன்கள் குவித்தார். மறுபுறம் விளையாடிய வந்த பாட் கம்மின்ஸ் 68 பந்திற்கு 12* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இவர்கள்  கூட்டணியில் 202 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், அஸ்மத்துல்லா உமர்சாய், நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்