சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!
சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது.
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
இந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜெய்ஸ்வால் (10), கே.எல்.ராகுல் (4) , சுப்மன் கில் (20), விராட் கோலி (17), பன்ட் (40) , ஜடேஜா (26), நிதிஷ்குமார் ரெட்டி (0), கேப்டன் பும்ப்ரா (22) ,பிரசித் கிருஷ்ணா (3) என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கி நேற்று 3 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. அப்போது விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க, ஆஸ்திரேலியா அணி தொடக்க வீரர்கள் நேரம் கடத்தினர். இதனை கவனித்த கேப்டன் பும்ரா நடுவரிடம் முறையிட்டார். அப்போது சாம் கான்ஸ்டாஸ் – பும்ரா இடையே மைதானத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தான், பும்ரா பந்துவீச்சில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அப்போது, கேப்டன் பும்ரா இதுவரை அந்த போட்டியில் அல்லாத கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். சாம் கான்ஸ்டாஸ்-ஐ பார்த்து ‘அடுத்து நீ’ என்பது போல கொண்டாடினார்.
அதே போல, இரண்டாம் நாளில் தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆகினார். மார்னஸ் லாபுசாக்னே 2 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆகினார். டிராவிஸ் ஹெட் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆகினார். நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 33 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் அவுட் ஆகினார்.
23 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 96 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா அணி. பியூ வெப்ஸ்டர் 27 ரன்களுடனும், தற்போது களமிறங்கிய அலெக்ஸ் கியாரியும் களத்தில் உள்ளனர்.