‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!
'பாக்சிங் டே' டெஸ்ட் முதல் நாளில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா 3 முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3வது சமனிலும் முடிவடைந்தது. இன்று மெல்போர்ன் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து ஆட்டத்தை தொடங்கியது. இதில் தொடக்க வீரராக அறிமுகமான 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் விளாசி அசத்தினார். உஸ்மான் கவாஜா 57 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 72 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அலெக்ஸ் கேரி 31 எடுத்து அவுட் ஆனார்.
இந்த தொடரில் இந்திய அணி பந்துவீச்சாளர்களை மிரள வைத்து வந்த டிராவில் ஹெட்டை டக் அவுட் ஆக்கினார் இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா. மிட்சல் மார்ஸ் 4 ரன்களில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் பும்ரா அசத்தலாக பந்துவீசி டிராவிஸ் ஹெட் , மிட்சல் மார்ஸ் , உஸ்மான் கவாஜா ஆகிய 3 முக்கிய விக்கெட்களை தூக்கினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.