சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணி, 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்தார். கூப்பர் கோனொலியால் கணக்கைத் திறக்க முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித் 73, மார்னஸ் லாபுசாக்னே 29, ஜோஷ் இங்கிலிஸ் 11, அலெக்ஸ் கேரி 61, கிளென் மேக்ஸ்வெல் 7, பென் துவார்ஷிஸ் 19, ஆடம் ஜாம்பா 7, நாதன் எல்லிஸ் 10 ரன்களில் அவுட்டாயினர்.
தன்வீர் சங்கா 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதில் ஸ்மித் மற்றும் கேரி அரை சதம் விளாசினர், பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில், இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில், முதலில் களமிறங்கிய ஷுப்மான் கில் 8 ரன்கள் எடுத்த பிறகு கிளீன் போல்டு ஆனார். 8வது ஓவரின் கடைசி பந்தில் இந்தியாவின் இரண்டாவது விக்கெட் விழுந்தது. ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கூப்பர் காலனி பந்து வீச்சால் அவருக்கு எல்பிடபிள்யூ வழங்கப்பட்டது.
அதன் பிறகு, 27வது ஓவரில் 134 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் மூன்றாவது விக்கெட் சரிந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆடம் ஜாம்பாவால் கிளீன் பவுல்டு ஆனார். அவர் 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். அடுத்ததாக, 35-வது ஓவரின் கடைசி பந்தில் மொத்தம் 178 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய அணியின் நான்காவது விக்கெட் விழுந்தது.
30 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த பிறகு அக்ஷர் படேல் பெவிலியன் திரும்பினார். அவர் நாதன் எல்லிஸால் கிளீன் பவுல்டு செய்யப்பட்டார். நிதானமாக விளையாடிய விராட் கோலி, 98 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 43 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணிக்காக விராட் கோலி அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர, ஷ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இறுதியில், இந்திய அணி, இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் செமி பைனலில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை லாகூரில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.