வார்னர் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20I சூப்பர் 8: இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா அணி, வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது.
நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றின் 4-வது மற்றும் தொடரின் 44-வது போட்டியில் இன்று காலை ஆஸ்திரேலிய மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது, ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்து. ஒரு கட்டத்தில் வங்கதேச அணியின் கேப்டன் சாண்டோ சற்று அதிரடி காட்டி 41 ரன்களுக்கு அட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு டவ்ஹித் ஹ்ரிடோய் ஒரு கேமியோ அதிரடியை காட்டி, நிலைத்து ஆடாமல் அவரும் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும், அவரை தொடர்ந்து எந்த வீரரும் பெரிய ரன்களை அடிக்கவில்லை, இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த 3 விக்கெட்டையும் அவர் ஹாட்ரிக் முறையில் கைப்பற்றி இருந்தார். அதன்பின், 141 என்ற எளிய இலக்கை எடுப்பதற்கு ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக விளையாடி வந்தது.
6 ஓவர்களிலேயே 60 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா அணி, தனது முதல் விக்கெட்டாக சிறப்பாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷ் ரன்களை எடுக்க தவறி 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு பின் டேவிட் வார்னரும், க்ளென் மேக்ஸ்வெல்லும் ஜோடி சேர்ந்து விளையாடி வந்தனர். அதில் வார்னர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சரியாக 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 100 ரன்களில் விளையாடி கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டு போட்டியானது தடைபட்டது.
மேலும், 15 நிமிடங்களுக்கும் மேலாக மழை நீடித்ததால், அப்போது ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவர்களில் வங்கதேசத்தை விட 28 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், DLS விதிப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியை வெற்றி பெற்றது என அறிவித்தனர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 2-ம் பிடித்து இந்திய அணிக்கு அடுத்தபடியாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.