டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!
பாக்சிங் டே டெஸ்ட் 4ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து 333 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. ஒரு போட்டி டிரா ஆனது. அதே போல் தற்போது நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியும் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
4வது டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 369 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள், கே.எல்.ராகுல் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சிறப்பாக ஆடிய நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் அடித்தார். ஜெய்ஸ்வால் 82 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களும் எடுத்திருத்தனர்.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், குறிப்பாக பும்ராவின் யாக்கரை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
4ஆம் நாள் ஆட்டத்தில், 9 விக்கெட்டுகளை 200 ரன்களில் இழந்த ஆஸ்திரேலியா அணி விரைவாக 10வது விக்கெட்டை இழந்து விடும், இந்திய அணி பேட்டிங் ஆடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாதன் லயன் நிலைத்து நின்றுள்ளார். அவர் 41 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். உடன் ஸ்காட் போலந்து 65 பந்துகள் ஆடி 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்து விடாமல் நிலைத்து நின்றுள்ளனர்.
இறுதியில், 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால் நாளை கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற, ஆஸ்திரேலியா அணியின் கடைசி வீரரின் விக்கெட்டை வீழ்த்தி, 333 ரன்களுக்கு மேலே ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கும் ரன்களை ஒருநாள் ஆட்டம் போல நிலைத்து ஆடி ரன்களை குவிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும்.
ஒருவேளை நாளை ஒரே நாளில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலக்கை எட்ட முடியாமல் போனால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெரும். இல்லையென்றால் இப்போட்டி டிராவில் முடிவைடையும். எப்படியும் , நாளை இப்போட்டி 3வது டெஸ்ட் போட்டி போல டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.