‘ஆஸி. அணி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்’! முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் பேச்சு!
சென்னை : இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறப் போகும் பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவார்கள் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துப் பேசி உள்ளார்.
ஆஸ்திரேலியா – இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரானது இந்த ஆண்டின் இறுதியில் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஆனால், இப்போதே அந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகம் பெற்று வருகிறது. மேலும், அந்த தொடரை வெல்லப் போவது யார் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த தொடரைப் பற்றி அதிகம் பேசியும் வருகின்றனர்.
அதற்கு மிகமுக்கிய காரணம் கடந்த 2018-2019, 2020-2021 ஆகிய அடுத்தடுத்த 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. தற்போது, ஹாட்ரிக் வெற்றியைப் படைக்க வேண்டும் என இந்திய அணியும், ஹாட்ரிக் வெற்றியைத் தந்து விடக் கூடாது என ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரில் சந்திக்க உள்ளனர்.
கில் கிறிஸ்ட் கணிப்பு ..!
இது குறித்துப் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 எனக் கைப்பற்றுவார்கள் எனக் கணித்திருந்தார். அதன்படி தற்போது அதே ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட்டும் இந்த தொடரை ஆஸ்திரேலியா தான் கைப்பற்றுவார்கள் எனக் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாகத் தனியார் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய அணி அவர்களது சொந்த மண்ணில் வலுவானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து வருகின்றனர். அதே போல மறுமுனையில் வெளிநாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரை எப்படி வெல்ல வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்.
அவர்களுடைய டெஸ்ட் போட்டியின் வேகப்பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் பந்து வீசுவார்கள். மேலும், அவர்களிடம் திறமையான பேட்டிங் வரிசையும் இருக்கிறது. எனவே இந்த பார்டர் கவாஸ்கர் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது.
எதுவாக இருந்தாலும் நான் அவுஸ்திரேலிய அணிக்காகவே ஆதரவு கொடுப்பேன். இம்முறை அவர்கள் வெற்றியின் பெறுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அது மிகவும் கடிமான வெற்றியாக இருக்கும் என்று நம்புகிறேன்”, எனத் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.