AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தித் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது.
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது டி20 தொடரானது நடைபெற்று வருகிறது.
இதில் இன்று முதல் டி20 போட்டியானது பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை காரணமாக தாமதமானது. இதனால், போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, பேட்டிங் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின், கிளென் மேக்ஸ்வெல் பாகிஸ்தான் பவுலர்களை பொளந்து கட்டினார். 7 ஓவர்கள் என்பதால் அதிரடியில் உச்சத்தில் மேக்ஸ்வெல் விளையாடினார்.
இதனால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அவர் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின், இறுதியில் ஸ்டோய்னிஸ் ஒரு அதிரடியான கேமியோவை அமைத்தார். வெறும் 7 பந்துகள் பிடித்த அவர் 21 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை அதிகரித்தார்.
இதன் காரணமாக, 7 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்தது. 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாட வேண்டும் என திட்டமிட்டு வந்த பாகிஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் பந்து வீச்சில் பதில் கூறினார்கள்.
அதன்படி, எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார்கள். இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி 7 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. மேலும், 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் 1-0 என முன்னிலையும் பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.