#INDvsNZ:முதல் இன்னிங்ஸின் முடிவில் 296 ரன்களுக்கு நியூ.அணி ஆல் அவுட்- மறுபுறம் முன்னிலையில் இந்தியா!
முதல் இன்னிங்ஸின் இறுதியில் நியூ.அணி,142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி,களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட இறுதியில் 84 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்திருந்தது.களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்த நிலையில் இருந்தனர். நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் 3, டிம் சவுத்தி 1 விக்கெட்டை பறித்தனர்.
இதனைத் தொடர்ந்து,இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று காலை தொடங்கிய நிலையில்,ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா ஆகியோர் களமிறங்கினர். ஆனால்,ஆட்ட தொடக்கத்திலேயே ஜடேஜா,சவுத்தியின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,விருத்திமான் சாஹாவும் வந்த வேகத்திலேயே திரும்ப, அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.
அதன்பின்னர்,ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்து,கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,அக்சர்,அஸ்வின்,இஷாந்த் விக்கெட்டை இழக்க ,இரண்டாம் நாள் இறுதியில் 10 விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி,111.1 ஓவர் முடிவில் 345 ரன்கள் எடுத்தது.நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளும்,ஜேமிசன் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
அதன் பின்னர், நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம், வில் யங் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடங்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர்.
இருப்பினும் , இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். இறுதியாக 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி 57 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 129 ரன்கள் சேர்த்தனர். களத்தில் டாம் லாதம் 50*, வில் யங் 75* ரன்கள் எடுத்தனர். இந்திய அணியை விட நியூசிலாந்து 216 ரன்கள் பின்தங்கியது.
இந்நிலையில்,இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய வில் யங் 89 ரன்கள் எடுத்த நிலையில்,கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து,கேப்டன் வில்லியம்சன் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபுள்யூ ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,ராஸ் டெய்லர்,ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் மிகச்சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து,நிதானமாக விளையாடி வந்த லாதம் 95 ரன்களில் ஆட்டமிழக்க,ரச்சின் ரவீந்திரா, டாம் ப்ளூன்டெல் (வாரம்), சவுதி, ஜேமிசன், சோமர்வில் என வரிசையாக வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து,முதல் இன்னிங்ஸின் இறுதியில் நியூசிலாந்து அணி,142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக அக்சர் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.இதனால்,முதல் இன்னிங்ஸின் முடிவில் நியூசிலாந்தை விட இந்திய அணி 49 ரன்கள் முன்னிலையில் உள்ளது.