3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டை இழந்து 215 ரன்கள்..!
இந்திய அணி 80 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியை இங்கிலாந்து அணி 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை பறித்தனர். இதனால், இந்திய அணி 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 132.2 ஓவரில் 432 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டையும், சிராஜ், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டை பறித்தனர். 354 ரன்கள் இங்கிலாந்து முன்னிலையில் இருந்த நிலையில், இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினார். ஆனால் முதல் இன்னிங்சிஸை போலவே கே.எல் ராகுல் நிலைத்து நிற்காமல் 8 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் அரை சதம் விளாசி 59 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்க புஜாரா, கோலி இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சிறப்பாக உயர்த்தினர். 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 80 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது புஜாரா 91*, கோலி 45 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்சில் புஜாரா ஒரு ரன்னும், கோலி 7 ரன்னும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.