#T20WorldCup:மளமளவென சரிந்த விக்கெட்டுகள்….தென்னாப்பிரிக்கா அணிக்கு 143 ரன்கள் இலக்கு..!
T20WorldCup:20 ஓவர் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனால்,இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக பதும் நிஸ்ஸங்கா,குசல் பெரேரா களமிறங்கினர்.
நிஸ்ஸங்கா சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்க்க,மறுபுறம் குசல் பெரேரா 7 ரன்கள் மட்டுமே எடுத்து நார்ட்ஜேவின் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார்.இதனையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி அடித்த நிலையில்,21 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன்பின்னர்,பானுகா ராஜபக்ச,அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் ஷம்சியின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனக 11 ரன்களில் வெளியேற,அடுத்து பேட்டிங் இறங்கிய சாமிக்க கருணாரத்னவும் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால்,கடைசி வரை களத்தில் இருந்த நிஸ்ஸங்கா சதம் அடித்து விடுவார் என்று எதிர்பாரக்கப்பட்ட நிலையில், 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடித்து 72 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து,துஷ்மந்த சமீர, லஹிரு குமாரவும் விக்கெட் இழக்க,இறுதியில் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.நிஸ்ஸங்கா அடித்த 72 ரன்களே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை தப்ரைஸ் ஷம்சி ,ட்வைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.