400 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அஸ்வின்.. ஆனால் இரண்டாம் இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் நிலையில், 400 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இரண்டாம் நாளிலே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் 34 வயதாகும் தமிழக வீரர் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தினார். இந்த தொடரில் அஸ்வின், 23 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் அஸ்வின், இந்த டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளுக்கு சொந்தக் காரராகினார். அந்தவகையில், 77 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அவர், 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். 2-வது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ், ஓலி போப் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரின் 400-வது விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சராகும். இவருக்கு முன் முதலிடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், 72 போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
A major milestone for India’s spin king R Ashwin ????#INDvENG pic.twitter.com/QbXdiD8fYO
— ICC (@ICC) February 25, 2021
மேலும் இந்திய அளவில் அஸ்வின், 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார். இவருக்கு முன் அணில் கும்ப்ளே 619 விக்கெட்களும், கபில் தேவ் 434 விக்கெட்களும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகள் எடுத்து முதல் மூன்றிடத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி அஸ்வின், இந்திய அளவில் அதிவேகமாக 400 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.