ஆசிய டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் 3 உலக சாதனைகளை படைத்தது நேபாள அணி!
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்.8 வரை நடைபெறுகிறது. கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் ஆசிய டி20 ஆடவர் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளது. அதாவது, இன்று நடந்த நேபாளம் – மங்கோலியா அணிகளுக்கு இடையிலான ஆசிய ஆடவர் 20 ஓவர் போட்டியில், மங்கோலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் நேபாள அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குசால் புர்டெல் (19 ரன்கள்), ஆசிப் ஷேக் (16 ரன்கள்) எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பிறகு, களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடினர். கேப்டன் ரோகித் பவுடல் 27 பந்தில் 6 சிக்சர் 2 பவுண்டரியுடன் 61 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய குசால் மல்லா சதம் (50 பந்துகளில் 137) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனிடையே, குசால் மல்லாவுடன் இணைந்த திபேந்திர சிங் முதல் பந்தில் இருந்து சிக்சர் மழை பொழிந்தார். இவர் சந்தித்த முதல் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்ட அவர், 7வது பந்தில் இரண்டு ரன்கள், அடுத்த இரு பந்துகளில் சிக்சர் என வெறும் 9 பந்தில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்தில் அரைசதம் கடந்ததே சர்வதேச ‘டி-20’ வரலாற்றில் அதிவேக அரைசதமாக இருந்த நிலையில், தற்போது அச்சாதனையை உடைத்தெறிந்தார் நேபாளம் வீரர் திபேந்திர சிங். இறுதியாக மங்கோலியா அணி எதிரான போட்டியில் நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா அணி 13.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, வெறும் 41 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நேபாளம் அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே, சீனாவின் நடைபெற்ற ஆசிய விளையாட்டின் டி-20 கிரிக்கெட் போட்டியில் நேபாளம் ஒரே போட்டியில் பல்வேறு அபார சாதனைகளை படைத்துள்ளது. அதாவது, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேபாளம் அணி மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளது. இதில், முதல் சாதனையானது, மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி வீரர் திபேந்திர சிங் 9 பந்துகளில் 8 சிக்சருடன் அரைசதம் விளாசி உலக சாதனை படைத்தார்.
இரண்டாவது சாதனையானது, 20 ஓவர்களில் நேபாள அணி 314 ரன்கள் குவித்து மற்றொரு உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்தது அதிகமாக இருந்தது. மேலும், 315 ரன்கள் இலக்குடன் விளையாடிய மங்கோலிய அணியை 41 ரன்களில் சுருட்டி மற்றொரு சாதனையையும் புரிந்துள்ளது நேபாளம் அணி. இதில், குறிப்பாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்து நேபாள் வீரர் குஷல் மல்லா வரலாற்று சாதனை படைத்தார். மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 34 பந்துகளில் சதமடித்து, தென்னாபிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் சாதனையை (35 பந்துகள்) முறியடித்தார் நேபாளம் வீரர்.