AsiaCup2023: இந்திய அணியில் இருந்து அவரச அழைப்பு.. உடனடியாக கொழும்பு புறப்பட்ட தமிழக வீரர் வாஷி!

Washington Sundar

கடந்த 30ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இறுதி போட்டியில் நடப்பு சாமியனான தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளது. ஆசிய கோப்பையின் இறுதி போட்டி கொழும்பு மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது.

இதில், இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு, ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது வங்கதேசம். இதற்கு முன்னதாக 2012ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது.

நேற்றைய வங்கதேசத்துக்கு எதிரா போட்டியில் இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் 42 (34) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியின்போது அக்சர் படேல் பேட்டிங் செய்த போது, எதிரணி கீப்பர் ஸ்டம்பிங் செய்தபோது ஆட்டமிழக்காமல் இருக்க கீழே விழுந்தார். அப்போது அக்சர் படேலின் கைகளில் காயம் ஏற்பட்டது. குறிப்பாக இடதுகை விரலில் விரலில் காயம் ஏற்பட்டதால், அப்போதே பிசியோவை அழைத்து சிகிச்சை எடுத்துக் கொண்டதோடு, வலி நிவாரணி ஸ்ப்ரேயும் அடித்துக் கொண்டார்.

அவரது காயத்தின் வீரியம் குறித்து சரியான தகவல் வெளியாத நிலையில்,  அக்சர் பட்டேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்படும் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ளதால் பிசிசிஐ கவலை அடைந்துள்ளது. ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும் என கூறப்படுகிறது.

மேலும், அக்சர் படேலின் விரலில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை. இதனால் நாளை நடக்கவுள்ள ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் அக்சர் படேல் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசிசிஐ நிர்வாகம் அவசரமாக தமிழக வீரர் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, இந்திய அணி அழைப்பை தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தர் உடனடியாக கொழும்பு புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகிய அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று மாலைக்குள் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. ஆசிய கோப்பையில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர், இந்திய அணிக்கு உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இலங்கை அணியில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்