AsiaCup2023: 6 முறை பட்டம்…12வது முறை இறுதிப்போட்டி… ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை!
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடும் மிக முக்கிய தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடரானது கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆசியா கோப்பை தொடர் ஆரம்பத்தில் ஒருமுறை நடைபெற்ற வந்த நிலையில், தற்போது சீரான இடைவெளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தாண்டு 2023-ல் 16-வது முறையாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் தொடங்கிய இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் என 6 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்து, சூப்பர் 4 சுற்று போட்டிக்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றது. இதில், இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 10 முறையாக ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனைத்தொடர்ந்து, நேற்று சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை இடையே நடைபெற்றது. இதில், பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது. இதில் இந்தியாவை இலங்கை அணி எதிர்கொள்கிறது. இந்த நிலையில், குறிப்பாக ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 12வது முறையாக (ODI) ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி. இதில் டி20 வடிவத்தை சேர்த்தால் 13வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.
இதுவே, அதிகமுறை ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையும் அடைந்தது. கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் கடைசியாக நடைபெற்ற 2022-ஆம் ஆண்டு வரை 15 ஆசிய கோப்பை தொடர்களில் அதிக முறை கோப்பையை வென்ற அணி எது? அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வி அடைந்த அணி எது? என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி, இதுவரை நடந்து முடிந்துள்ள 15 ஆசிய கோப்பை தொடர்களில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்தாண்டும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதேபோன்று மூன்று முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக இலங்கை அணி 6 முறை கோப்பையை வென்றுள்ளது. 6 முறை தோல்வியை சந்தித்துள்ளது. இவர்களுக்கு அடுத்து பாகிஸ்தான அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக 2022-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடினர்.
அந்த தொடரில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக இந்தாண்டு களமிறங்கிய நிலையில், தற்போது இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆனால், இந்த முறை 50 ஓவர் போட்டியாக விளையாட உள்ளது. எனவே, ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா – இலங்கை அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இதில், குறிப்பாக இலங்கை அணியில் முக்கிய வீரர்களான வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, லஹிரு மதுஷங்க மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டுடன் 16வது முறை நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில், இதற்கு முன் 2 முறை டி20 வடிவத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.