Asia Cup: பாகிஸ்தான் கேப்டன் சாதனை! நேபாளுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி!

pakistan win

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதியது. இப்போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நேபால் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியுடன் நேற்று விளையாடியது. அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச களத்தில் முதல் முறையாக நேபால் அணி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. இதனால் இப்போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்தவகையில், நேற்று நேபால் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக் ஆகிய இருவருமே 14 மற்றும் 5 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இது இன்னும் இப்போட்டியை சுவாரஸ்யமாக்கியது.

இருவரின் விக்கெட்டை தொடர்ந்து, கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு ரன்களை குவித்தனர். இ தில், முகமது ரிஸ்வான்  44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட்டாகி வெளியேறினார். மறுபக்கம், நிதானமாக விளையாடி வந்த பாபர் அசாம் தனது அரை சதத்தை 72 பந்துகளில் கடந்தார். இவருக்கு ஜோடியாக களத்தில் இருந்த மற்றொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இப்திகார் அகமது ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த பாபர் அசாம் 109 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது 19வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். எனவே, சர்வேதேச கிரிக்கெட்டில் 19 ஒருநாள் சதங்கள், 9 டெஸ்ட் சதம், 3 டி20 சதங்கள் என மொத்தம் 31 சர்வதேச சதம் அடித்து அசத்திருந்தார்.

மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த இப்திகார் அகமது 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் பின்னர் பாபர் அசாம், இப்திகார் அகமது இருவரும் இணைந்து பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டனர். இதில், குறிப்பாக இப்திகார் அகமது 67 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்கள் (14 பவுண்டரி , 4 சிக்சர்), இப்திகார் அகமது 109 ரன்கள் (11 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தனர்.

நேபாளம் சார்பில் சோம்பால் கமி 2 விக்கெட் , கரண் கேசி, சந்தீப் லாமிச்சானே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபால் அணி, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை சமழிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது.  இதில், தொடர்ந்து சிறிது நேரம் நிலைத்து ஆடிய ஆரிப் ஷேக் 26 ரன்களும் , சோம்பால் கமி 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 23.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் 4 விக்கெட், ஷாஹீன் ஷா அப்ரிடி , ஹரிப் ரவுப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனிடையே,  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் படைத்தார். இதற்கு முன்னதாக வங்கதேச அணியின் கேப்டனாக இருந்தபோது முஷ்ஃபிகுர் ரஹிம் 144 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், ஆசியக் கோப்பை தொடர்களில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரராக இந்திய அணியின் விராட் கோலி 183 தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கையின் பல்லேகெல்லேவில் நடைபெறும் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்