Asia Cup: இந்தியா Vs பாகிஸ்தான்… போட்டி ரத்தாக வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த ஷாக் நியூஸ்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இலங்கையில் பல்லேகெல்லே சர்வதேச மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் மோத உள்ளன. இதனால் இப்போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலுக்கான பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போட்டியை காண இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்று தீர்த்தன. நாளை மைதானம் முழுவதும் ப்ளூ, கிரீன் தான் நிரம்பி இருக்கும். இந்த சமயத்தில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, நாளை நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மழை ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.
போட்டி நடைபெறும் பல்லேகெல்லேயில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டத்துடன் மழை பெய்து வருவதாகவும், நாளை குறிப்பாக பிற்பகலில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுபடி, நாளை கண்டி மீது அடர்த்தியான மேக மூட்டம் இருக்கும் என்றும் அன்றைய தினம் மழைக்கான சாத்தியக்கூறு 94 சதவிகிதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மதியம் முதல் இரவு வரை மழை பெய்ய 99 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் (பகல்-இரவு) மோதும் ஆட்டத்தில் அதிகபட்சமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை காரணமாக போட்டி நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. குரூப் ஸ்டேஜில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே எதுவும் கிடையாது, இதனால் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை போட்டி ரத்தானால் என்ன நடக்கும் என்பதையும், இந்தியா எப்படி முதல் சுற்றுக்கு தகுதி பெறும்? என்பதையும் தற்போது பார்க்கலாம்.
இப்போதெல்லாம் மிகப்பெரிய போட்டிகளுக்கு ஐசிசி ரிசர்வ் நாளை அறிவித்திருக்கிறது. ஆனால் ஆசிய கோப்பை போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படவில்லை. இதனால் மழையால் போட்டி ரத்தானால் அது மீண்டும் நடத்தப்படாது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். இதனால் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதாவது ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்கும் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா உள்ளது. இதில், இரண்டு சிறந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அந்த வகையில் பாகிஸ்தான் 3 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், இந்தியா ஒரு புள்ளி உடன் 2வது இடத்திலும் இருக்கும். இதை அடுத்து வரும் திங்கட்கிழமை இந்தியா நேபாளம் அணி மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
ஒரு வேலை அந்தப் போட்டியும் மழையால் தடை பட்டால் மீண்டும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு சென்று விடும். எனவே, நாளை போட்டி நடைபெறுமா அல்லது மழை குறுக்கிட்டு ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த போட்டி மழையால் ரத்தானால் அது இரு அணிகளுக்குமே மிகவும் ஏமாற்றமாக இருக்கும். குறிப்பாக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். எனினும், ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோத அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.