ஆசிய கோப்பை 2023: மீண்டும் சிக்கலா? பாகிஸ்தான் யோசனையை நிராகரித்த மூன்று நாடுகள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட ஆசிய கோப்பைக்கான யோசனையை நிராகரித்த மூன்று நாடுகள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்த உள்ளது. கிட்டத்தட்ட 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.
வரும் செப்.2ம் தேதி தொடங்கும் இந்த தொடர், செப்.17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 15 முறை நடைபெற்ற ஆசியகோப்பை தொடரை, 7 முறை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அரசியல் மட்டுமின்றி, விளையாட்டு போட்டிகளில் கூட இந்திய – பாகிஸ்தான் அணிகள் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றன.
இருநாடுகளுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தன. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கோ, இந்திய அணி பாகிஸ்தானிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.
இருப்பினும், ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஆசியகோப்பை மற்றும் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த சமயத்தில், நடப்பாண்டிற்கான ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு உடனே, பாகிஸ்தானிற்கு, இந்திய அணி செல்லாது என பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆகையால், நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய பங்கேற்பதில் சிக்கல் இருந்து வந்தது. இதனால், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆசியக்கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால், இந்திய அணிக்கு உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
எனவே, ஆசியக்கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், 2008ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவது உறுதியானது.
இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தானின் முன்மொழிவை, அதாவது இந்திய அணிக்கான லீக் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் “hybrid model” என்ற யோசனையை ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் நிராகரித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் முன்மொழியப்பட்ட ஆசிய கோப்பை 2023க்கான “hybrid model” ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் நிராகரித்துள்ளன என்று PTI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த “hybrid model”- யின் கீழ், 2023 ஆசிய கோப்பையின் 4 அல்லது 5 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ளவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) விளையாடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது என்பதால் இந்த “hybrid model” என்ற யோசனை முன்மொழியப்பட்டது. தற்போது, இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி), பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) ஆகியவை பாகிஸ்தானின் முன்மொழிவை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் ஆளும் குழுக்கள் ஆசிய கோப்பை 2023 போட்டியில் கலந்துகொள்ள ஹைப்ரிட் மாடலை நிராகரித்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால், ஆசிய கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும் என்றால் நடுநிலையான மைதானத்தில் விளையாட வேண்டும்.
ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், அவர்கள் இலங்கையில் போட்டியை நடத்த வேண்டும், இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். மூன்று நாடுகளும் பாகிஸ்தான் முன்மொழியப்பட்ட ஹைபிரிட் மாடலை நிராகரித்ததால், PCB போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. இது நடந்தால், ஆறு அணிகள் பங்கேற்கும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.