Asia cup 2023 : தொடர்ந்து 11வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி சாதனை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியான பி பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி வங்கதேசம் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையே நாகினி டான்ஸ் ரைவல்ரி இருப்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதாவது, போட்டியில் ஒரு அணி வெற்றி பெற்றால் மற்றொரு அணிய பார்த்து நாகினி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றுவார்கள்.
இதனால் இரு அணிகளுடையே இந்த நாகினி ரைவல்ரி இருக்கிறது. இந்த சமயத்தில் இலங்கையின் பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை கொடுத்த வங்கதேசம் அணி ஒரு இக்கட்டான கட்டத்தில் இருந்தது.
ஆனால், வங்கதேச பேட்டிங்கில் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ தனியொருவராக போராடி சோ்த்த ரன்களாலேயே அந்த அணி ஒரளவு ஸ்கோரை சோ்த்தது. இருப்பினும், பதிரானா மற்றும் தீக்சனாவின் அபார பந்துவீச்சால் வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய பதிரானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச பேட்டிங்கில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனி ஒரு ஆளாக 89 ரன்கள் அடித்து அணிக்கு சற்று வலு சேர்த்தார்.
இதனைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க இலங்கை அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் பந்தில் குசால் மெண்டிஸ் 5 ரன்களில் வீழ்ந்தார். இதனால் போட்டி சுவாரசியமானது. பின்னர் இலங்கை அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தததால், ஆட்டம் லோ- ஸ்கோரிங் த்ரில்லராக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது களத்தில் சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய சமரவிக்ரமா 69 பந்துகளில் அரைசதம் கடந்து 54 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தனஞ்செயலா டி சில்வா 2 ரன்களில் அவுட்டானார். இதனால் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து தடுமாறியது. ஆனால் மறு பக்கம் விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய அசலங்கா அரை சதத்தை கடந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியாக 39 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 92 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடர்ச்சியாக 11 ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. இதுவரை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 10 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ள நிலையில், தற்போது முதல் முறையாக தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.
சிறப்பாக பந்துவீசிய சிஎஸ்கே வீரரும் இலங்கை அணி வீரருமான குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் பதிரானா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து, போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார். எனவே, ஆசிய கோப்பை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், போட்டியின் 3-ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை ஆட்டம் ஏதும் இல்லை. நாளை 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை (செப். 2) மோதுகின்றன. இப்போட்டி இலங்கையின் பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.