Asia Cup 2023 : அதே போட்டி.. அதே நேரம்.. ‘ரிசர்வ் டே’வில் இன்று களம் காணும் இந்தியா – பாகிஸ்தான்.!

INDvPAK asia cup 2023

2023 ஆசிய கோப்பை தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தேர்வாகி விளையாடி வருகின்றன.

நேற்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் விளையாட ஆரம்பித்தன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

 ஏற்கனவே இந்த மைதானத்தில் மழை பெய்யும் வாய்ப்பு 90 சதவீதம் உள்ளது என இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த காரணத்தால், இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ‘ரிசர்வ் டே’ செய்யப்பட்டு இருந்தது.  மழை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டால் இன்று மீண்டும் இதே போன்று போட்டி தொடரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் , இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் 56 மற்றும் 58 ரன்கள் அடித்து அவுட் ஆகி இருந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் 8 மற்றும் 17 ரன்களுடன் களத்தில் நின்றனர். 24.1 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்த சமயத்தில் சுமார் 4.30 மணியளவில் மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியது.

 மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை நின்ற பிறகு, இரவு 7.30 மணி, 8 மணி, 8.30 மணி என மைதானம் சோதனை செய்யப்பட்டது. பின்னர் ஓவர் குறைக்கப்பட்டு விளையாட அனுமதிக்கலாமா என்று ஆலோசிக்கும் போதே 8.45 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

இதன் காரணமாக இன்று அதே 3 மணி அளவில், இந்திய அணி விளையாடி இருந்த 24.1 ஓவரில் இருந்து விளையாட்டு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஏமாற்றத்தில் வீடு திரும்பிய ரசிகர்கள் இன்றைய நாள் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்