பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
ஒரு நாள் தொடரில் முதலில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்றில்லை. கோலி தனது வழக்கமான பாணியில் நிதானமாக தொடங்கி நிலைத்து ஆடினாலே போதும் என அஸ்வின் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இறுதியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. அதிலும் ரோஹித் மற்றும் கோலியின் விளையாட்டு திறன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
விராட் கோலி முதல் டெஸ்ட் சதத்தை தவிர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் அதுவும் ஒரே பாணியில் அவுட் ஆகி, அடுத்த முறையாவது வேறு முறையில் பேட்டிங் ஆடி அவுட் ஆகுங்கள் என ரசிகர்கள் கூறும் அளவுக்கு மிக மோசமாக அமைந்தது விராட் கோலியின் பேட்டிங்.
‘கிங்’ கோலி, ரன் மிஷின் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட விராட் கோலி தற்போது தன்னுடைய பழைய நிதானம் to அதிரடி பேட்டிங் பாணிக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருக்கு பலரும் விராட் கோலி இந்த மாதிரி பேட்டிங் செய்ய வேண்டும் என அட்வைஸ்களையும் கூறி வருகின்றனர்.
விராட் கோலி ஃபார்ம் குறித்தும் அவர் எப்படி மீண்டு வர வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஷ்வினும் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ” விராட் கோலி தனது பேட்டிங் ஸ்டைலை மாற்ற வேண்டியதில்லை. அவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும்.” என அஸ்வின் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ” ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஹிர்திக் பாண்டியா, ரின்கு சிங் ஆகிய அதிரடி ஆட்டக்காரர்களுக்கு இறுதியில் அவர்கள் பாணியில் ஆட உதவி செய்தாலே போதும். அதாவது தொடக்க ஆட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக தொடக்கத்தை அளிப்பார்கள். இறுதியில் களமிறங்கும் ஆட்டக்காரர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். இவர்களுக்கு இடையில் பாலமாக செயல்படும் பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவர் விராட் கோலி. ” என குறிப்பிட்டார்.
” இது டி20 கிரிக்கெட் போட்டி அல்ல. ஒரு நாள் தொடர் இதில் முதலில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்றில்லை. கோலி தனது வழக்கமான பாணியில் நிதானமாக தொடங்கி நிலைத்து ஆடினாலே போதும். கோலி பேட்டிங்கில் அவசரப்பட தேவையில்லை.” என விராட் கோழி பேட்டிங் குறித்து அஸ்வின் தனது கருத்தை தெரிவித்தார். 2023 உலக கோப்பை தொடரில் விராட் கோலி மொத்தமாக 765 ரன்கள் எடுத்திருந்தார். 95.62 சராசரி வைத்து இருந்தார். 90.31 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.