38-வது பிறந்தநாளை கொண்டாடும் அஸ்வின்! “சுழல் புயல்” படைக்க போகும் அடுத்தகட்ட சாதனை!
சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
சென்னை : இந்திய அணியின் சீனியர் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தகட்டமாக டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைக்கவுள்ளார். நாளை மறுநாள் (செப்-19) தொடங்கவிருக்கும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இவர் அணியில் இடம் பெற்று விளையாடியோ அல்லது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலோ 14-விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினால் உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
இந்தியாவின் சூழல் ஜாம்பவானாக அஸ்வின் இன்று அவரது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு இணையத்தில் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காகச் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வரும் அஸ்வின் உலக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்திய அணி அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் இன்னும் 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
இதனால், தொடர்ச்சியாக வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர்களை இந்திய அணி கைப்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஸ்வின் இனி வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் வகிப்பார்.
அதே நேரம் இதுவரையில் 174 விக்கெட்டுகளை எடுத்திருக்கக் கூடிய அஸ்வின் இன்னும் 26 விக்கெட்டுகளை, எஞ்சி இருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றினால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 200 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் படைப்பார்.
தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுழற் பந்து வீச்சாளரான நார்தன் லயன் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்தில் இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளுக்கும் மேல் விளையாடியுள்ள அஸ்வின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 174 விக்கெட்டுகளும், ஒட்டுமொத்தமாக 516 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.