அவுங்க சிந்தனை வேற மாறி…ஹர்திக் உடற்தகுதி பற்றி ஆஷிஷ் நெஹ்ரா பேச்சு!
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவும், டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்படாதது ஒரு சர்ச்சையாக வெடித்த நிலையில், பல கிரிக்கெட் வீரர்களுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படாதது குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட் என்று சொன்னால் இது போன்ற விஷயங்கள் எல்லாம் நடப்பது சாதாரண ஒரு விஷயம் தான்.
ஏனென்றால், அணிக்கு ஒரு புதிதான பயிற்சியாளர் வருகிறார் என்றால் அவருடைய சிந்தனைகள் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும். எனவே, அதனுடைய வெளிபாடாகதான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்டியா பாண்டியா உடல் தகுதி சவாலாக இருப்பது தான் அவரை கேப்டனாக நியமிக்கவில்லை என்று தேர்வாளர் அஜித் அகர்கர் சொன்னார்.
ஆனால், உடல்தகுதி என்றால் ஹர்திக் ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவு விளையாடுவதில்லை. டி20 போட்டிகளில் தான் விளையாடுவார். எனவே, அவருடைய உடல் தகுதி எந்த இடத்தில் சரியாக இல்லை என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும், இங்கு ஒவ்வொருத்தருக்கும் எண்ணங்கள் வேறு மாதிரி இருக்கிறது. அதன் காரணமாக கூட இப்படி நடந்து இருக்கலாம்.” எனவும் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.