#Ashes2023: மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை குண்டுக் கட்டாக தூக்கி சென்ற இங்கிலாந்து வீரர்!

Jonny Bairstow

போட்டியின்போது மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை தூக்கி சென்ற இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை செய்தது. அதன்படி, முதலில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான  டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு அசாதாரண மற்றும் வினோதமான சம்பவம் லண்டனில் உள்ள லார்ட்ஸில் மைதானத்தில் நடந்துள்ளது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டு, பின்ன தொடங்கியது. அதாவது, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது போட்டியின்போது, ஆரஞ்சு நிற பவுடருடன் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் ஒருவரை, இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

போட்டியின் முதல் ஓவர் முடிந்ததும், இரண்டு ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ எதிர்ப்பாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ஆரஞ்சு பவுடரை வீசியுள்ளனர். பின்னர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் எதிர்பாராளர்களில் ஒருவரை தனது தோளில் தூக்கிச் சென்று அப்புறப்படுத்திய நிலையில், மைதான ஊழியர்கள் மற்ற நபரை மைதானத்திலிருந்து வெளியேறினார். 5-10 நிமிட தாமதத்திற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியதால் பேர்ஸ்டோவ் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று தனது சட்டையை மாற்றிக் கொண்டு திரும்பினார்.

உகாண்டாவில் எண்ணெய் குழாய்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து “Just Stop Oil” என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 3 பேரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர் என்று பெருநகர காவல்துறை கூறியுள்ளது. ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் எதிர்ப்பாளர்கள் இந்த ஆண்டு பிரிட்டனில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்த மாதம் லண்டனில் நடந்த அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர்கள் இங்கிலாந்து அணி பேருந்தை சிறிது நேரம் நிறுத்தியுள்ளனர்.

மேலும், பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள், ட்விக்கன்ஹாமில் நடந்த பிரீமியர்ஷிப் ரக்பி இறுதிப் போட்டி மற்றும் ஷெஃபீல்டில் நடந்த உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை குறிவைத்தனர். புதிய எரிபொருள் உரிமம் மற்றும் உற்பத்தியை பிரிட்டிஷ் அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஜானி பேர்ஸ்டோவ் எதிர்பாராளர்களில் ஒருவரை தனது தோளில் தூக்கிச் சென்ற வீடியோ குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்