ஆஷஸ் தொடர்: 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 58 ரன் முன்னிலை..!
3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ் 5, ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்க இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று 2-ஆம் ஆட்டம் தொடங்கிய போது ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடங்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் வந்த வேகத்தில் 3 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர், மார்னஸ் லேபஸ்சேகன் சிறப்பாக விளையாடினர். நிதானமாக விளையாடிய மார்னஸ் லேபஸ்சேகன் 74, டேவிட் வார்னர் 94 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
மத்தியில் இறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழந்து 343 ரன்கள் எடுத்தனர். களத்தில் டிராவிஸ் ஹெட் 112 *, மிட்சேல் ஸ்டார்க் 10* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆஸ்திரேலியா அணி விக்கெட்டை இழந்தனர். டிராவிஸ் ஹெட் மட்டும் 150 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன் எடுக்க இறுதியாக ஆஸ்திரேலியா அணி 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 425 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன், மார்க் வுட் தலா 3 , கிறிஸ் வோக்ஸ் 2 , ஜோ ரூட், ஜேக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட் பறித்தனர். இன்றைய மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் 27, ரோரி பர்ன்ஸ் 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் , ஜோ ரூட் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினர்.
இறுதியாக 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியா அணி 58 ரன் முன்னிலையில் உள்ளது. களத்தில் டேவிட் மாலன் 80*, ஜோ ரூட் 86* ரன்களுடன் உள்ளனர்.