ஆஷஸ் தொடர்: 2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 196 ரன்கள் முன்னிலை..!
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழந்து 343 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இரு அணிகளும் முதல் போட்டி நேற்று முதல் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஒல்லி போப் 35, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் கம்மின்ஸ் 5, ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து, நேற்றைய மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்க இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று 2-ஆம் ஆட்டம் தொடங்கிய போது ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடங்க வீரர்களாக மார்கஸ் ஹாரிஸ் , வார்னர் களமிறங்க வந்த வேகத்தில் மார்கஸ் ஹாரிஸ் 3 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர், மார்னஸ் லேபஸ்சேகன் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இவர்கள் இருவரும் 156 ரன்கள் எடுத்தனர். நிதானமாக விளையாடிய மார்னஸ் லேபஸ்சேகன் 74 ரன்னில் மார்க் வூட்டிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து இறங்கிய ஸ்மித் வெறும் 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 94 ரன் எடுத்து நடையை கட்டினார். அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுக்க மத்தியில் இறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இறுதியாக 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழந்து 343 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 3 ,கிறிஸ் வோக்ஸ் , ஜோ ரூட் , மார்க் வுட் ,ஜேக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட் பறித்தனர். தற்போது களத்தில் டிராவிஸ் ஹெட் 112 *, மிட்சேல் ஸ்டார்க் 10* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி 196 ரன்கள் முன்னிலையில் உள்ளது.