அருண் கார்த்திக் அதிரடி சதம்..! நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய NRK vs CSG போட்டியில், நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 14வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. இதில் அபராஜித் அதிரடியால் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியில் முதலில் அருண் கார்த்திக், நெரஞ்சன் ஜோடி களமிறங்கினர்.
இருவரும் பொறுப்பாக விளையாடிய நிலையில் சிலம்பரசன் வீசிய பந்தில் நெரஞ்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அருண் கார்த்திக் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களில் களத்தை விட்டு வெளியேறினார்.
பிறகு அருண் கார்த்திக் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்கவிட்டு டிஎன்பிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியில் அருண் கார்த்திக் மற்றும் அஜிதேஷ் குருசுவாமி களத்தில் இருக்க, நெல்லை அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.
இதனால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 104* ரன்களும், ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்களும், நெரஞ்சன் 24 ரன்களும் குவித்துள்ளனர்.