ஆஸி மண்ணில் இந்திய சிங்கத்தின் சம்பவம்! சதம் விளாசி சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!
ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்டில் சதம் அடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். 22 வயதான இவர் இந்த வயதிலே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வருவதால் எதிர்காலத்தில் முக்கிய ஒரு வீரராக அணிக்கு இருப்பார் என கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகள் என்றால் அதிரடி…டெஸ்ட் போட்டி என்றாலும் அதிரடி தான் என்பது போல தற்போது பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமான சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார். அது என்ன சாதனை என்றால், ஆஸ்திரேலியாவில் எதிரான தனது முதல் டெஸ்டில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனை தான்.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் 8 பந்துகளில் டக் ஆன ஜெய்ஸ்வால், முதல் முறை தான் மிஸ் ஆகும் அடுத்த முறை மிஸ் ஆகாது என்கிற வகையில், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 62வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தை மடக்கி சிக்ஸர் விளாசி 100 ரன்களைக் கடந்தார். இந்த சதத்தின் மூலம் தான் சில சாதனைகளையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த இந்தியர்கள்
- மோட்கன்ஹல்லி ஜெய்சிம்ஹா – பிரிஸ்பேனில் 101 (1968)
- சுனில் கவாஸ்கர் – 113 பிரிஸ்பேனில் (1977)
- யஷஸ்வி ஜெய்ஸ்வால் – பெர்த்தில் 101* (2024)
23 வயதிற்கு முன் அதிக டெஸ்ட் சதங்கள்
- சச்சின் டெண்டுல்கர் – 8
- ரவி சாஸ்திரி -5
- சுனில் கவாஸ்கர்-4
- வினோத் காம்ப்ளி -4
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்- 4
அதைப்போல, இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ஜெய்ஸ்வால், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலுக்குப் பிறகு சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையயும் பெற்றார். 2015 ஜனவரி 6 முதல் 10 வரை நடந்த சிட்னி டெஸ்டில் இந்திய அணிக்காக ராகுல் 110 ரன்கள் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் அந்த சாதனையை படைத்திருக்கிறார்.