கத்துனா மட்டும் கோப்பை வராது! பெங்களூரை பொளந்து கட்டிய அம்பதி ராயுடு!

Ambati Rayudu

சென்னை : ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மே 22-ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப்போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பெங்களூர் அணியை பற்றி இப்போது பேசினால், அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்.

அது என்னவென்றால், அவர்களுக்கு ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று தான் சொல்வேன். கோப்பையை வெல்லவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. சரியாக விளையாடவேண்டும். சென்னை அணியை வென்றால் மட்டும் கோப்பையை வென்றது போல் ஆகிவிடாது. இதனை கண்டிப்பாக பெங்களூர் அணி புரிந்துகொள்ளவேண்டும். ஐபிஎல் கோப்பையை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் நீங்கள் பிளே ஆஃப் சுற்றில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கவேண்டும்.

சில முக்கியமான போட்டிகளில் எப்படி விளையாடினாள் வெற்றிபெறமுடியும் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த ஆண்டு திருத்திக்கொண்டு விளையாடுங்கள்” எனவும் அம்பதி ராயுடு கூறியுள்ளார். மேலும், இந்த போட்டிக்கு முன்னதாக பெங்களூர் அணி சென்னை அணியை எதிர்கொண்டு சென்னையை வீழ்த்தி தான் எலிமினேட்டர் போட்டிக்குள் சென்றது.

சென்னை அணிக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றிபெற்றவுடன் பெங்களூர் வீரர்கள் கொண்டாடிய விதம் விமர்சனங்கள் எழும் வகையில் அமைந்த நிலையில், அதனை மனதில் வைத்து தான் அம்பதி ராயுடு கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று கூறியதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்