கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் வந்த அப்ரிடி கடந்த 2017-ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றார். சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், 359 விக்கெட்டுகளையும் அப்ரிடி வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், அப்பிரிடி தனது 4 மகள்களுடன் சேர்ந்திருப்பது போன்று புகைப்படத்தை இன்று ட்விட்டரில் பதிவிட்டார் அந்த பதிவுக்குப்பின்தான் நெட்டிசன்கள் பதற்றமடைந்தனர்.
அப்ரிடிக்கு அன்ஷா, ஆக்ஸா, அஜ்வா, அஸ்மாரா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளோடுஉடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்று புகைப்படத்தை பதிவிட்டார். அடுத்த படத்தில் வீட்டில் அப்ரிடி வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள்அஜ்வா நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் புகைப்படம் இருந்தது.
அந்தப் புகைப்படத்தின் கீழ், அப்ரிடி பதிவிடுகையில், என் நேசிக்கும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது மிகச்சிறப்பானது. நான் விக்கெட் வீழ்த்தும் போது, கையை உயர்த்தி, வி போன்று விரல்களை வைத்து மகிழ்ச்சியைத் தெரிவிப்பேன். அதேபோன்று எனது மகள் செய்வது எனக்கு உலகிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டில் நான் வளர்க்கும் விலங்குகளையும் நான் பராமரிக்கத் தவறுவதில்லை. அந்த விலங்குகள் மீது தனி அன்பும், அரவணைப்பும் எடுத்துப் பராமரிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் ஏராளமான கமென்ட்டுகளை பதிவிட்டனர்.
உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி’, ‘வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு’, ‘குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள்’, ‘மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள்’, ‘நீங்கள் செய்வது சட்டப்படி தவறு’ என்றெல்லாம் கமென்ட்டுகளை அள்ளிவீசினார்கள்.
இறுதியாக தனதுவீட்டில் வளர்க்கும் சிங்கத்தின் புகைப்படத்தை அப்ரிடி பதிவிட்டு தான் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்தார்.