ஒரு அணிக்கு 15 பேரு தான்…இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெறாதது குறித்து அஜித் அகர்கர்!!
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி , 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்பு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பற்றிய விமர்சனங்கள் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா ஆகியோர் இடம்பெறாதது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், பல கிரிக்கெட் வீரர்களும் இது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள். இது தொடர்பாக கேள்வி அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் இருவரிடமும் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அஜித் அகர்கர் “அணியில் பல வீரர்கள் இடம்பெறாமல் இருக்கலாம். இது மிகவும் கடினமாக தான் இருக்கிறது. ஆனால், ஒரு அணியில் 15 வீரர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள முடியும். நாங்கள் இப்போது தேர்வு செய்துள்ள வீரர்கள் எல்லாரும் நன்றாக சமீபத்தில் விளையாடியவர்களாக தான் இருப்பார்கள்.
அதில் சில வீரர்களுக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் ரிங்கு சிங் தேர்வு செய்யாதது அவரது தவறு அல்ல. சில சமயங்களில் இப்படி நடக்கலாம். முக்கிய வீரர் ரிஷப் பண்ட் காயம் குணமாகி தற்போது மீண்டும் விளையாட வந்து இருக்கிறார். எனவே, நாங்கள் அவரை அதிகமாகப் பயன்படுத்த விரும்புகிறோம்” எனவும் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.