இதெல்லாம் நடக்குற கதையா? மழையால் தகர்ந்த ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு!
நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு முழுதாக தகர்ந்துவிட்டது.

கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இதில் இங்கிலாந்து அணி மட்டுமே அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று பெரும் வாய்ப்பை இழந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து அரையிறுதிக்கு யார் முன்னேறுவார்கள் என எதிர்நோக்கப்பட்டது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றிருந்தால் தங்கள் அரையிறுதி இடத்தை பலமாக பதிவு செய்திருக்கும்.
குறுக்கே வந்த மழை :
ஆனால், குறுக்கே இந்த ‘கௌசிக்’ வந்தால் என்பது போல, மழை குறுக்கிட்டு ஆட்டத்தை இரண்டாம் பாதியில் இருந்து தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து 13வது ஓவர் வரையில் (ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள்) மட்டுமே விளையாட முடிந்தது. அதற்கடுத்து மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தை தொடர முடியவில்லை.
இதனால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு பாயிண்ட் என கொடுக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் விளையாடி 1 வெற்றி 2 நோ ரிசல்ட் என மொத்தம் 4 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு?
இதனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே 3 பாய்ண்டுகளுடன் உள்ளன. தென் ஆப்பிரிக்கா ரன் ரேட்டில் +2.14 ஆக உள்ளது. ஆப்கன் ரன் ரேட்டில் -0.99 ஆக உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் தோற்றாலும் தென் ஆப்பிரிக்கா தான் தகுதி பெரும் நிலையில் உள்ளது.
இது நடந்தால், அது நடக்கும்!
இதில் ஆப்கானிஸ்தான் ஜெயிக்க ஒரே வழி இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை அதிக ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். அதாவது, டார்கெட் 300 என இருந்தால், அதனை 11.1 ஓவருக்குள் இங்கிலாந்து சேஸ் செய்ய வேண்டும். அதே டார்கெட் 300 என இங்கிலாந்து நிர்ணயித்து இருந்தால் 207 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்.
தகர்ந்த அரையிறுதி கனவு :
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள், தென் ஆப்பிரிக்கா தோற்றாலும் மேற்கண்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது நடக்காத காரியம். இதனை குறிப்பிட்டு ஆப்கானிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்தது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். விளையாடி தோற்றால் கூட பரவாயில்லை. ஆனால் மழை குறுக்கிட்டு விளையாட முடியாமல் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது முதன் முறையாக சாம்பியன்ஸ் டிராபி விளையாடிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி.