இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கருப்புபட்டை அணிந்து இறங்கிய ஆப்கானிஸ்தான் ..!
உலகக் கோப்பையின் 9-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து களம் இறங்கினர்.
ஐசிசி உலகக் கோப்பை 2023-ன் 9-வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் இறங்கியபோது அவர்கள் கையில் கறுப்புப் பட்டையை அணிந்திருந்து இருந்தனர்.
ஏன் அணிந்திருக்கிறார்கள்..? என ரசிகர்கள் ஒரு நிமிடம் யோசிக்க அதன் பின்னணியில் உள்ள காரணம் இறுதியாக தெரியவந்துள்ளது. தங்கள் நாட்டில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இதைச் செய்தனர். இரு அணி வீரர்களும் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்திய பிறகு தேசிய கீத பாடல் ஒலிக்கப்பட்டது.
கடந்த வாரம் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனுடன் ஆப்கானிஸ்தானில் பெரும் சேதங்களுக்கும் ஏற்பட்டது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.