நெதர்லாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி..!

ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 34-ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், நெதர்லாந்து அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக  வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ டவுட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொங்கிய முதல் ஓவரிலேயே வெஸ்லி பாரேசி 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கொலின் அக்கர்மன் மற்றும் மேக்ஸ் ஓ டவுட் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை மீட்டனர். சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ் ஓ’டவுட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்தபோது 42 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

இதைத்தொடர்ந்து, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த கொலின் அக்கர்மன், ரஷித் கான் ஓவரில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் களமிறங்கிய அனைத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்படி பாஸ் டி லீடே , சாகிப் சுல்பிகர் தலா  3 ரன்னிலும் , லோகன் வான் பீக் 2 ரன்னிலும் , கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் டக் அவுட் ஆனார்கள். இதில் குறிப்பாக கேப்டன் உட்பட 4 பேர் ரன் அவுட்டாகி வெளியேறினார்கள்.

இருப்பினும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் நிதானமாக விளையாடி அரை சதம் பூர்த்தி செய்து 58 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து179 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 3, நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  சுலபமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக  இப்ராஹிம் சத்ரான்,  ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ரஹ்மத் ஷா களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த இப்ராஹிம் சத்ரான்,  வான் டெர் மெர்வே வீசிய பந்தில் போல்ட் ஆனார். இதைத்தொடர்ந்து, கேப்டன் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கினர்.

பின்னர் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி  மற்றும் ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில், நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் பூர்த்தி செய்து அடுத்த சில நிமிடங்களில் விக்கெட்டை இழந்தார். நடப்பு உலககோப்பையில் ரஹ்மத் ஷா இதுவரை 3 அரைசதம் அடித்துள்ளார்.

இருப்பினும் மறுபுறம் விளையாடிய கேப்டன் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் ஹஹ்மத்துல்லா ஷாஹிதி 56*  ரன்களுடனும், அஸ்மத்துல்லா உமர்சாய் 31* ரன்களுடன் இருந்தனர்.

நெதர்லாந்து அணியில் சாகிப் சுல்பிகார், வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக் தலா 1 விக்கெட்டை பறித்தனர். ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 3 தோல்வியையும் அடைந்து 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி  7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும், 5 தோல்வியையும் அடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்